ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, எமது உணவுகளை சரியான முறையில் உண்ண வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன், ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளம் சூடான நீர் அருந்துவதன் மூலம், உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். அத்துடன் மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
இளஞ் சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் கிடைக்கும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். சளி மற்றும் இருமலுக்கு இது நல்ல மருந்து. இதனை தொடர்ந்து அருந்துவதன் மூலம், எமது குரல் மென்மையாகும். அத்துடன் ரத்தத்தைச் சுத்தம் செய்வதுடன், உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.
வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீரை, வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக் கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்துவதுடன், எமது ரத்தத்தை விருத்தியாக்கும்.
பழங்களை உண்ணுவதன் மூலம், எமது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணி, பப்பாளி, என்பவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. எனினும் வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.