தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான திகதி மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் என்பன நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தினது தற்போதுள்ள நிர்வாக உறுப்பினர்களின் ஆட்சிக்காலம் பல மாதங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்த நிலையிலும், 2019-2022 ஆம் ஆண்டுக்கான சங்க நிர்வாக தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படாமல் நீண்ட இழுபறி நிலை தொடர்ந்த நிலையில், எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாகவுள்ள அனைவருமே, சங்கத்தின் அடுத்த தலைமையைத் தீர்மானிக்கும் தேர்தலில் தமது வாக்களிக்கும் உரிமையைப் பெறும் வகையில், எதிர்வரும் 23ம் திகதியன்று சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் படப்பிடிப்புகளை நிறுத்தி தேர்தல் காலத்தில் திரையுலகுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டொக்டர் எம்ஜிஆர் ஜானகி அறிவியல் மகளிர் கல்லூரியை வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.