3,362 Views
நகைச்சுவை நடிகர்களைக் கதாநாயகனாக்கும் முயற்சிகள் எப்போதும் நடந்துகொண்டிருக்கும். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இப்போது இருப்பவர் சூரி. அவரைக் கதாநாயகனாக நடிக்க வைக்கப் பல மாதங்களாகவே முயற்சிகள் நடந்துவருகிறதாம்.
புதிய இயக்குநர்கள் நிறையப்பேர் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களாம். தொடக்கத்தில் சில கதைகளைக் கேட்டபோது சூரிக்கும் கதாநாயகனாக நடிக்கும் அசை வந்திருக்கிறது. அதேசமயம் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டால் பெரிய ஹீரோக்கள் யாரும் கிட்ட சேர்க்கமாட்டார்கள் என்கிற உண்மையை அவருக்கு நெருக்கமானவர்கள் எடுத்துச் சொன்னதும் சுதாரித்துக்கொண்ட சூரி, கதாநாயகனாக நடிக்கவே மாட்டேன் என்று ஒன்றுக்குப் பலமுறை சொல்லிவிட்டார். ஆனாலும் விடாமல் அவரை நாயகனாக நடிக்கக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்களாம்.
பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கும் மூத்தகதாசிரியர் மற்றும் இயக்குநர் ஒருவர் அண்மையில் சூரியைக் கதாநாயகனாக நடிக்கவைக்க விருப்பப்பட்டு அணுகியிருப்பதாகத் தெரிகிறது. அவருக்காக ஒரு கதையை எழுதி அதற்கான திரைக்கதை எழுதும் வேலைகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
நீண்டஅனுபவம் வாய்ந்தவர் கேட்பதால் சூரி மறுக்கமாட்டார் என்று வெளியில் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இதுபற்றி சூரி தரப்பில் கேட்டால், இப்போது அஜித் படம் உட்பட பல படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார், அதனால், எக்காரணம் கொண்டும் சூரி கதாநாயகனாக நடிக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்லுகிறார்கள்.
-கோடம்பாக்கக் குருவி -