எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில், யுத்தக்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கு உறுதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வால், இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணை ஒன்றை முன்வைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த பிரேரணை இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச அறிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர், சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப விவாதத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான சர்வதேச பொறிமுறை குறித்த தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
அதேநேரம், கடந்த தேர்தலின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச பொறிமுறைக்கே ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.