கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அதிக அளவிலான அகதிகள் வருவதனை எப்படி கையாள்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் கவலை கொண்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று முன் தினம் சேர்பியாவில் இருந்து ஹங்கேரிக்குள் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான அகதிகள் சென்றுள்ளனர்.
நேற்று மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான சேர்பியர்கள் எல்லை தாண்டி ஹங்கேரிக்குள் நுழைந்துள்ளனர்.
இதனை தடுக்கும் நோக்கில் ஹங்கேரி எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சேர்பியா மற்றும் ஹங்கேரிக்கு இடையேயான எல்லை பிராந்தியத்தில் 13 அடி உயரமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, எல்லைப் பிராந்தியத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹங்கேரியன் துருப்பினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து அகதிகளை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் புள்ளி விபரங்களின்படி இந்த வருடத்திற்குள் மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குடியேறிகள் ஹங்கேரிக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒஸ்ட்ரியாவிலிருந்தான ரயில்களை தற்காலிகமாக அந்நாடு இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.