விஜய்யின் கத்தி திரைப்படம் எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பை வெட்டிக்கொண்டு வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருந்த இளையதளபதி விஜய் மற்றும் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, தமது உக்கிர எதிர்ப்பின் மூலம் தொடர்ந்து வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் திரைப்பட எதிர்ப்பாளர்கள்.
"லைக்கா" என்ற பெயரை நீக்காதவரை படத்தை வெளியிட தாங்களும் "லைக்"பண்ணப்போவதில்லை என்ற நிலையிலேயே, தமிழ் மாணவர் அமைப்புக்கள்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலர் இன்னமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"கத்தி" படம் எதிர்ப்புகளை தாண்டி நாளை தீபாவளிக்கு வெளியாகும், 'எதிர்ப்புகளை சமாளித்து விட்டோம்' என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்றையதினம் தனது "ருவிட்டர்" தளத்தில் தெரிவித்திருந்தார். அதேவேளை 'தடைகளை உடைத்து விட்டோம்' என இயக்குனரும்,விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரும் கூறியுள்ள நிலையில் இந்த எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.
இந்தநிலையில், சென்னையில்
"கத்தி' திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கின் மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்படும் அளவுக்கு இதன் தீவிரநிலை அதிகரித்துள்ளதாம்."கத்தி" பட வெளியீடு பிரச்சனையில் உள்ள நிலையில், ரிக்கட் முன்பதிவு மேற்கொண்ட சென்னை ராயப்பேட்டை "சத்யம்" திரையரங்கத்தின் மீதே இரவு இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாம். திரையரங்க ஊழியர்களின் மிகப்பெரும் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி.
இதேவேளை, திரையரங்கின் முன்பகுதி முற்றாக சேதமடையும் அளவுக்கு 3குண்டுகள் வீசப்பட்டுள்ளதாம். அங்கிருந்த "கத்தி" பட விளம்பரப்பதாதைகளும் கிழித்து சேதமாக்கப்பட்டதுடன், படத்துக்கு எதிராக கோசமும் எழுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபற்றி வெளியாகியுள்ள செய்திகளுடன் கூடிய புகைப்படங்களில், திரையரங்கத்தின் கல்வீச்சிற்கு உள்ளாகி முற்றுமுழுதான சேதத்திற்குள்ளான முகப்புப்பகுதியே காணப்படுகின்றது.
இதேவேளை சத்யம் திரையரங்கு மீது வீசப்பட்டதாக சொல்லப்படும் பெட்ரோல் குண்டின் மீதியைப் பொலிசார் வெளியிட்டுள்ளதோடு, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை கைது செய்திருப்பதாகவும் சென்னை போலீசார் கூறியுள்ளனர்.

தற்போது, ஜெயலலிதா பிணையில் வெளியான நிலையில், இந்த எதிர்ப்புப் போராட்டம் இன்னும் வலுப்பெறுவதாக அங்கிருந்து கிடைத்த தகவலும் உங்களுக்காக.......
என்று தணியும் இந்த எதிர்ப்புப் போராட்டம்...? எப்போ வெளிவரும் "கத்தி"...?கேள்விகளோடு காத்திருக்கும் ரசிகர்களோடு நாங்களும்..
தமிழகத்திலிருந்து கிடைத்த செய்திகளின் அடிப்படையில் தொகுத்தவர்: கணேசமூர்த்தி ராகவன்