3,017 Views
மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
புறகரில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக காட்சி அளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர், மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கும் அவர்கள், உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்கள்.
சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் நேற்று விமானத்தில் சென்று பார்வையிட்டார்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பல் நேற்று முன்தினம் 20 டொன் நிவாரண பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சாயத்ரி ஆகிய மேலும் 2 போர்க்கப்பல்கள் 100 டன் நிவாரணப் பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன.