செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள OpenAI நிறுவனம், மனித உருவில் இயங்கும் ரோபோக்களை உருவாக்கி வருவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் அல்ட்மன் தெரிவித்துள்ளார். இந்த ரோபோக்களின் செயற்திறனை விளக்கும் முதல் செயல்விளக்கத்தை 2027ஆம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எளிதாகச் செயற்படும் வகையில் இந்த ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் வெளித்தோற்றத்தைவிட, சுற்றுப்புறத்தைப் புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அல்ட்மன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த ரோபோக்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் மனித உருவ ரோபோக்களை உருவாக்கி வரும் நிலையில், OpenAI நிறுவனத்தின் இந்த முயற்சி தொழில்நுட்பத் துறையில் போட்டியை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.