சாதாரண வெளிச்சத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து, குறிப்பிட்ட ஒளியைப் பாய்ச்சும்போது வண்ணமயமாகத் தோன்றும் புதிய வகை Tattoo மையை அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். PhotoTat எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், Tattoo துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மையில் பயன்படுத்தப்படும் ஒளி உணர்திறன் கொண்ட வேதிப்பொருட்கள், புற ஊதா (UV) ஒளி படும்போது நீலம், மஜந்தா, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களாக மாறுகின்றன. பின்னர், சாதாரண ஒளியைப் பயன்படுத்தி மீண்டும் நிறமற்ற நிலைக்குக் கொண்டுவர முடியும். இதன் மூலம் ஒரே Tattooவில் பல்வேறு நிறங்களையும் வடிவங்களையும் உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அழகுக்காக மட்டுமின்றி, மருத்துவத் துறையிலும் இத்தொழில்நுட்பம் பயன்படக்கூடும். குறிப்பாக, கதிர்வீச்சு சிகிச்சையின்போது மருத்துவர்களுக்குத் தேவையான தோல் அடையாளங்களை, பரிசோதனை நேரத்தில் மட்டும் தெரியும்படி உருவாக்க உதவலாம்.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தின் நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் நடைமுறைப் பயன்பாடு குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. தற்போது ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்தப் புதிய கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் Tattoo பயன்பாட்டில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.