பழங்காலம் முதலே மனிதர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து வரும் பூனைகள், வெறும் செல்லப்பிராணிகள் மட்டுமல்லாது , மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் துணையாகவும் இருக்கின்றன. வீட்டில் நிலவும் இறுக்கமான சூழலைப் பூனைகள் உணர்ந்துகொள்ளும் என்றும், அவற்றின் அருகாமை எதிர்மறை எண்ணங்களைக் குறைத்து மனதிற்கு நிம்மதி அளிக்கும் என்றும் பலர் நம்புகின்றனர்.குறிப்பாக, நாம் சோகமாக இருக்கும்போது மடியில் வந்து படுத்துக்கொண்டு மெதுவாகச் சத்தமிடும் பூனைகளின் செயல் மனதிற்கு இதமான உணர்வைத் தருகிறது.
பூனைகளுக்கு மனிதர்களைவிடக் கூர்மையான கேட்கும் திறனும், நுட்பமான அசைவுகளை உணரும் திறனும் உள்ளன. இதனால், யாரும் இல்லாத இடத்தை உற்றுப் பார்ப்பது, திடீரென ஒரு சத்தத்தைக் கேட்டு மிரள்வது போன்ற செயல்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பூனைகள் எதிர்மறை ஆற்றலை உள்வாங்குகின்றன அல்லது அவற்றுக்குச் சிறப்பு அமானுஷ்ய சக்திகள் உள்ளன என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. அவற்றின் இயல்பான உணர்திறனும், மனிதர்களுடனான பாசமான உறவும் அவற்றைத் தனித்துவமான செல்லப்பிராணிகளாக மாற்றுகின்றன.