34 Views
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் எதிர்காலம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா அடுத்த IPL தொடருடன் ஓய்வு பெறுவார் என்று உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்த அவர், மகேந்திர சிங் தோனியும் நீண்ட காலமாகத் தொடர்ந்து விளையாடி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத் தலைவராக நாமன் தீர் உருவாகும் வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். அவரது தெளிவான சிந்தனையும், நெருக்கடியான சூழல்களிலும் அமைதியாகச் செயல்படும் தன்மையும் தலைமைப் பொறுப்புக்கு ஏற்ற பண்புகள் என அவர் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வேறு அணிக்கு வீரர் பரிமாற்றம் மூலம் செல்லக்கூடும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாகப் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து ஒரு சுழற்பந்து வீச்சாளரையோ அல்லது இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளரையோ மும்பை அணி பெற முயற்சிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், ஹர்திக் பாண்டியா அணியிலிருந்து வெளியேறுவது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.