ஸீரோக்கள் ஆக்கப்பட்ட இந்தியாவின் உலக கிண்ண ஹீரோக்கள்.அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ணத்துக்கான கனவோடு சர்வதேச அளவில் அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
உலக கிண்ணத்தை ஒரு முறையாவது ருசிக்க வேண்டும் எனும் கனவோடு
பல அணிகளும் ,இன்னுமொரு தடவை ருசிக்க வேண்டும் எனும் கனவோடு
சில அணிகளும் அடுத்தாண்டு உலக கிண்ணத்தை நோக்கி காத்திருக்கின்றன.
இப்படியான நிலையில்தான் ஒவ்வொரு அணிகளதும் உத்தேச அணி விபரம் அறிவிக்கபடுகின்றது.இளம் வீரர்களை பொறுத்த வரையில் இறுதி அணியில் இடம்பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை உத்தேச அணியில் அவர்களது பெயர் இணைக்கபடுவதையே அவர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
இப்படியிருக்க கடந்த உலக கிண்ண அணியில் இடம்பிடித்து அண்மைய நாட்களில் அணியிலிருந்து புறக்கணிக்கப்படும் நிலையிலும், ஓய்வை அண்மித்துக்காத்திருக்கும் மூத்த வீரர்களுக்கும் இதே நிலைப்பாடுதான்.
இளையவர்களை பொறுத்தவரையில் அணியில் இடம்பெறுவது ஒரு உற்சாகமாகவும், பழையவர்களை பொறுத்தமட்டில் இது ஒரு கௌரவமுமாகவே இந்த உத்தேச அணியில் இணைக்கபடுதல் நோக்கப்படுகின்றது.
இப்படியிருக்க இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பொறுத்த வரையில் அவர்கள் அண்மைய நாட்களில் துணிகரமான முடிவுகளை எடுப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள் அத்தோடு பாரட்டப்படுகிறார்கள்.அவர்கள் இப்போதைய நிலையில் கடந்த கால சாதனைகளை விடுத்து அண்மைய சாதனைகளையே பெருமளவில் கவனத்தில் கொள்வதுண்டு.சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களாக இருந்த/இருக்கும் அவுஸ்ரேலியர்கள் இவ்வாறான நிலைப்பாட்டில் தான் தங்களது அணிகளை தேர்வு செய்பவர்கள்.
அதுதான் அவர்களது தொடர்ச்சியான வெற்றி நிலைப்பட்ட பெறுதிகளுக்கான உச்சபட்ச காரணம் என்று சொல்லலாம்.ஆனால் ஆசிய நாட்டு அணிகளை நோக்கும் போது அவர்கள் தற்கால பெறுதிகளை விடவும் அவர்களது கடந்த கால சாதனைகளை கருத்தில் கொண்டு வாய்ப்புக்களை அள்ளி அள்ளி வழங்கி வருபவர்கள்.
இதற்கான பல உதாரணங்களை குறிப்பிட்டு விடலாம்.இப்படியான நிலையில் இதுவரை இருந்த இந்திய கிரிக்கெட் தேர்வு முறை இப்போது மாற்றம் கண்டிருக்கின்றமைதான் அவர்களது தொடர் ஒருநாள் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் உலக கிண்ணத்துக்கான உத்தேச 30 பேர் கொண்ட அணிவிபரம் அறிவிக்கபட்டிருக்கின்றது.

அதிலே பெரியளவில் ஆச்சரியங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் சிரேஸ்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டமை சிலருக்கு சிறியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
காரணம் என்னவெனில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி உலக கிண்ணத்தை ஏந்துவதற்கு பிரதான பாத்திரமேற்ற சாதனை நாயகர்கள் ஒட்டுமொத்தமாக ஓரம் காட்டப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த முறை உலக கிண்ணத்தை ஏந்திய அணியில் அங்கம் வகித்த நால்வரை தவிர அணியில் ஏனைய 11 பேர் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த காணமல் போன 11 பேரில் சச்சின் ஓய்வு பெற்றுவிட்டார்.IPL சூதாட்டம் காரணமாக ஸ்ரீசாந்துக்கு போட்டித்தடை விதிக்கபட்டிருக்கிறது.வேகபந்து வீச்சாளர் பிரவீன் குமார் உள்ளூர் போட்டிகளில் கூட அடையாளமில்லாமல் போய்விட்டார்.
ஆனால் ஏனைய 8 வீரர்களும் IPL போட்டிகள், இந்தியாவின் மாநில அணிகளுக்கிடையிலான போட்டிகள் என்று தங்கள் அணிகளுக்காக கிரிக்கெட் ஆடி வருபவர்களே!
ஆகமொத்தத்தில் இந்தியாவின் இறுதி 15 பேர் கொண்ட உலக கிண்ண அணியில் இவர்கள் உள்வாங்கபடாவிட்டாலும் 30 பேர் கொண்ட அணியில் உள்வாங்கபடலாம் என்ற நிலையில் காத்திருந்து ஏமாறிப்போனவர்கள்தான்.
குறிப்பாக யுவ்ராஜ் ,சேவாக்,கம்பீர்,ஹர்பஜன்,சகீர்கான் ஆகிய வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் இதன்மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்றும் கருதலாம் போலிருக்கின்றது.
இதுதான் இவர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இப்படி சாதனைகளை சாதித்திருக்கும் மூத்த வீரர்கள் கவனிக்கபடாமல் இளம் வீரர்கள் பட்டாளம் அணியில் போட்டி போட்டுக்கொண்டு இடம்பிடித்திருக்கிறது என்றால் உண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

இந்தியாவின் தேசிய அணியை காட்டிலும் அவர்களது இரண்டாம் தர அணி பலமான அணியாக செயற்படுகின்றது,அந்த அணியில் அங்கம் பெற்றிருக்கும் வீரர்கள் தேசிய அணிக்கு வருவதற்கு கடும் போட்டி போட்டுக் கொண்டு வரிசைகட்டி நிற்கிறார்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக,இலங்கை அணிக்கெதிராக என்று இந்த இளம் அணி பயிற்சி ஆட்டங்களில் எல்லாம் வெளுத்துக்கட்டியிருக்கிறது.இதைவிடவும் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற இந்திய ,தென் ஆபிரிக்க,அவுஸ்ரேலிய A அணிகளுக்கிடையிலான மும்முனை போட்டிதொடரிலும் கிண்ணத்தை வெற்றி கொண்டது.
வெளிநாட்டு மண்களில் இந்திய தேசிய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் இந்த இந்திய A அணியானது அவுஸ்ரேலிய A அணிக்கெதிரான உத்தியோக பற்றற்ற டெஸ்ட் போட்டிகளிலும் மிகப்பெரும் திறமையை காட்டி வியக்கவைத்தது.
அப்படியான திறமையான வீரர்களை கொண்ட இளம் இந்திய அணியில் அண்மைய நாட்களில் இந்தியாவின் 2011 உலக கிண்ண ஹீரோக்கள் எவருமே இடம்பிடிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கதுவே .அந்தளவிற்கு இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி தேர்வாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தவர்கள் எனலாம்.

இப்படியான நெருக்குதல்களுக்கு மத்தியில் கடந்த உலக கிண்ண போட்டிகளின் போது சாகசங்கள் புரிந்து நெருக்கடியான பல தருணங்களில் நேர்த்தியாக துடுப்பாட்டம் பந்துவீச்சு என்று பலவழிகளிலும் அணிக்கு பலமாக செயற்பட்ட யுவ்ராஜ் சிங் சேர்க்கப்படவில்லை என்பது ஏமாற்றமேதான்.
காம்பிர்,சேவாக் ஆகிய வீரர்களின் அண்மைய பெறுதிகள் பெரியளவில் பேசப்படும் நிலையில் இல்லை என்பது உண்மைதான்.ஆரம்ப வீரர்கள் நிலைக்கு தவான்,ரோஹித் சர்மா,ராஹனே,உத்தப்பா என்று பல திறமையான இளம் வீரர்கள் இவர்களது வரவை கேள்விக்குறியாக்கி விட்டார்கள்.

அத்தோடு சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் இளம் வீரர்களான அஸ்வின்,ஜடேஜா ,அக்ஸ்சார் பட்டேல் ஆகியோரோடு போட்டி போட முடியாமல் இடத்தை இழந்திருக்கின்றார்.
36 வயதாகும் வேகபந்து வீச்சாளர் சகீர்கான் வேகத்தையும் இழந்திருப்பதோடு இளம் வீரர்களான புவனேஸ்வர் குமார்,சாமி அஹ்மத்,வருண் ஆரோன்,உமேஷ் யாதவ்,மோகித் சர்மா ஆகிய வீரர்களுடன் ஒப்பிடுகின்ற நிலையில் அனுபவம் என்பது சாதகமாக இருந்தாலும் திறமை என்பதும் ,வேகமும் இவர் இடத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது.

இவர்களெல்லாம் கடந்த காலங்களிலும் ,கடந்த உலக கிண்ண போட்டிகளின் போதும் இந்திய அணியில் மிகப்பெரும் வகிபாகமாக இருந்தாலும் அண்மைய நாட்களில் இவர்களது சேவை என்பது தேவையற்றுப் போயிருக்கின்றமை தான் நிதர்சனம்.
கடந்த காலங்களில் இவர்களது சாதனைகளை கருத்தில் கொண்டு குறைந்தது 30 பேர் கொண்ட பட்டியிலிலாவது இடத்தை கொடுப்பதற்கு இந்திய தேர்வுகுழு விரும்பியிருப்பினும் எதிர்கால அணியின் நலனை கருத்தி கொள்ளும்போது கேள்விகள் வலுப்பெற்று நிற்கின்றன.
எது எவ்வாறாயினும் அண்மைய நாட்களில் மிகப்பெரும் திறமையை வெளிக்காட்டிவரும் இளம் வீரர்களான உண்முக்த் சண்ட்,மியாங் அகர்வால் ஆகிய வீரர்களைகூட அணியில் தேர்வு செய்ய முடியாது உள்ள நிலையில் உள்ளூர் போட்டிகளில் பெருமளவில் பேசப்படாத சிரேஸ்ட வீரர்கள் சேர்ப்பு என்பதும் நேர்த்தியல்லவே.
கடந்த முறை உலக கிண்ணத்தை ஏந்தி சாதனைகள் பல படைத்த டோனி தலைமையிலான இந்திய அணி அதனை தக்க வைப்பதற்கு போட்டி போடக் கூடிய நிலையில் வலுவாகவே இருக்கின்றது.
வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் ஒருநாள் போட்டிகளில் அவர்கள் மோசமான தோல்விகளை தழுவியதில்லை.
வேகபந்துக்கு சாதகமான இங்கிலாந்து,அவுஸ்திரேலிய,நியூஸ்லாந்து மண்ணில் இந்தியாவின் ஒருநாள் வெற்றிகள் மோசமான நிலையில் இல்லாத நிலையில் அவர்களது TEST தோல்விகளை வைத்துக் கொண்டு சோபிக்க தவறுவார்கள் என்று கணிப்பது தவறாகிவிடலாம்.
எது எவ்வாறாயினும் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் 30 பேர் கொண்ட உத்தேச அணியிலிருந்து இறுதி 15 பேர் கொண்ட அணியில் இந்த வீரர்களை எதிர்பார்க்கலாம்.

1.சிகார் தவான்,
2.ரோஹித் சர்மா,
3.விராத் கொஹ்லி,
4.அஜின்கியா ரஹானே
5.சுரேஷ் ரைனா,
6.MS டோனி,
7.அம்படி ராயுடு,
8.ராபின் உத்தப்பா ,
9.ரவீந்திர ஜடேஜா,
10.ரவிச்சந்திரன் அஸ்வின்,
11.அக்சார் பட்டேல்/கரன் சர்மா,
12..புவனேஸ்வர் குமார்,
13..மொகம்மது சாமி,
14.இஷாந்த் சர்மா,
15.வருண் ஆரோன்,
16.உமேஷ் யாதவ்/மோஹித் சர்மா
அடுத்தடுத்து 2 உலக கிண்ணங்களை வெற்றி கொண்ட மேற்கிந்திய தீவுகள்,அவுஸ்ரேலிய அணிகளை போன்று இந்தியாவும் சரித்திரம் படைக்க இப்போதைய நிலையில் அவர்களுக்கு பந்து வீச்சு கைகொடுக்குமாயின் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் இன்னுமொரு அசத்தல் உலக கிண்ண வெற்றி எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கலாம்.
*தில்லையம்பலம் தரணீதரன்
05.12.2014