பாஸ்டன் நகரில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவின் ஆட்டம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. போட்டியின் 25-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் நௌசீர் மஸ்ராவியின் பிழையால் பிரான்ஸிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நீண்ட இழுபறிக்குப் பிறகு எம்பாப்பே உதைத்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பூனு மிகச் சிறப்பாகத் தடுத்தார்.
முதல் பாதியில் பிரான்ஸ் அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய போதிலும், கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது.
இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. 60-வது நிமிடத்தில் டேஸிர் டூ கொடுத்த துல்லியமான பாஸை, எம்பாப்பே மிக அழகாக வலைக்குள் செலுத்தி மொராக்கோவின் தடுப்பாட்டத்தை உடைத்தார். இது அவரது இந்த உலகக்கோப்பையின் எட்டாவது கோலாகும்.
அதன் பிறகு ஆறு நிமிடங்கள் கழித்து, எம்பாப்பேவின் உதவியுடன் டெம்பலே இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் பிரான்ஸின் வெற்றி உறுதியானது. இந்த ஆட்டத்தின் மூலம் எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார்.
உலகக் கிண்ண வரலாற்றில் 20 கோல்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், இரண்டு வெவ்வேறு உலகக்கோப்பைகளில் 10-க்கும் மேற்பட்ட கோல் பங்களிப்புகளை வழங்கிய முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பூனு, உலகக் கிண்ண வரலாற்றில் பெனால்டி ஷூட்-அவுட்கள் உட்பட நான்கு பெனால்டிகளைத் தடுத்த முதல் கோல்கீப்பர் என்ற சாதனையை இந்த ஆட்டத்தில் பதிவு செய்தார்.