அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணக் கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் அணிகள் மோதின.
இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அணி வரலாற்று வெற்றியைப் பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
84 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த ஸ்பெய்ன் அணியின் நடுகள வீரர் மைகெல் மெரினோ 91 ஆவது நிமிடத்தில் பெரான் டோரஸ் கொடுத்த பந்தை மிக லாவகமாக கோலாக மாற்றி ஸ்பெய்ன் இரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.
41 வயதான போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய கடைசி உலகக்கிண்ணப் போட்டி இதுவாகும்.
உலகக்கிண்ணத்தை வெல்லும் அவரது இறுதி முயற்சியும் இந்தத் தோல்வியுடன் முடிவுக்கு வந்ததால், அவர் மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.