தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி, மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த 'ரன்' திரைப்படம் வருகிற ஜூலை 10-ஆம் திகதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் திரைப்படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
'ரன்' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார்.
அப்போது அவர், "இந்த திரைப்படத்தை முதலில் விஜய்யை வைத்து இயக்குவதற்காகவே ஏ.வி.எம். நிறுவனத்திலிருந்து என்னை அனுப்பி வைத்தார்கள். நான் எஸ்.ஏ. சந்திரசேகர் sir ஐ சந்தித்து கதையை கூறினேன். ஆனால் அப்போது விஜய் sir இன் பட வரிசை வேறு மாதிரியாக திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் 'தமிழன்' திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். 'ஒரு பெண்ணின் பின்னால் சுற்றும் காதல் கதையை இப்போது செய்ய வேண்டாம்' என்று எஸ்.ஏ. சந்திரசேகர் sir கூறி அந்தக் கதையை மறுத்துவிட்டார்," என்றார்.
தொடர்ந்து பேசிய லிங்குசாமி, "'சண்டக்கோழி' மற்றும் 'வேட்டை' திரைப்படங்களும் முதலில் விஜய் சாருக்காகத்தான் எழுதப்பட்ட கதைகள். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படங்கள் அவருடன் இணையாமல் போய்விட்டன," என்று தெரிவித்துள்ளார்.
லிங்குசாமியின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது