வாகனங்களில் பயணிக்கும் போது குளிரூட்டியை (A/C) இயக்கியதும் சில வேளைகளில் வீசும் துர்நாற்றம் முழுப் பயணத்தையுமே அசௌகரியமாக்கி விடுகிறது. இதனைப் பெரும்பாலானவர்கள் சாதாரணமாகக் கடந்துபோனாலும், இதன் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்வது ஆரோக்கியத்திற்கும் வாகனப் பாதுகாப்பிற்கும் அவசியமாகும்.
குளிரூட்டியின் எவாபரேட்டர் கோரில் (Evaporator Core) ஏற்படும் நீர்த்துளிகள் வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்படும் போது, நீர் உள்ளேயே தேங்கிவிடுகிறது. இந்த ஈரப்பதத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் காளான்கள் வளர்வதனாலேயே மோசமான துர்நாற்றம் வீசுகிறது.
காற்றைச் சுத்திகரிக்கும் ஃபில்டரை நீண்ட காலம் மாற்றாமல் விடும்போது, அதில் தூசியும் ஈரப்பதமும் தங்கிவிடுகின்றன. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், காருக்குள் இருப்போருக்கு ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இருக்கைகளுக்கு அடியில் விழும் உணவுப் பொருட்கள் அல்லது காயாத ஈரமான தரைவிரிப்புகள் (Carpets) மூலமும் காருக்குள் துர்வாடை பரவலாம்.
அவதானிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்
குளிரூட்டியை இயக்கும் போது பெட்ரோல் அல்லது இரசாயன வாசனை வீசினால் அது என்ஜின் ஆயில் அல்லது பிரேக் ஃபுளுயிட் கசிவாக இருக்கலாம். அதேபோல் எரியும் வாசனை வந்தால் அது மின்சுற்று (Short Circuit) கோளாறாக இருக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக வாகனத்தை மெக்கானிக்கிடம் காண்பித்துச் சரிசெய்வது அவசியமாகும்.
இதற்கான எளிய தீர்வுகள்
கேபின் ஏர் ஃபில்டரை (Cabin Air Filter) உரிய கால இடைவெளியில் புதியதாக மாற்றுங்கள்.
பயணத்தை முடித்து வாகனத்தை நிறுத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், ஏசி (A/C) சுவிட்சை மட்டும் அணைத்துவிட்டு, விசிறியை (Blower) மட்டும் ஓடவிடுங்கள். இது எவாபரேட்டரில் தேங்கியுள்ள ஈரப்பதத்தை உலரச் செய்து பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கும்.
காருக்குள் எப்போதும் சுத்தத்தைப் பேணுங்கள்.