உலக கிண்ண கால்பந்து தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் அரையிறுதிப் போட்டியில், ஐரோப்பிய ஜாம்பவான்களான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.
நாளை நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே 8 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். அதேசமயம், மிக வலுவான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்பெயின், இந்தத் தொடரில் பெல்ஜியத்திற்கு எதிராக மட்டுமே ஒரு கோலை விட்டுக்கொடுத்துள்ளது. தனது மின்னல் வேக தாக்குதல் ஆட்டத்தை பிரான்ஸ் நம்பியுள்ள நிலையில் ஸ்பெயின் அணியின் தற்காப்பு ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சிக்கும்.
இரு அணிகளும் சர்வதேச அரங்கில் இதுவரை 38 முறை மோதியுள்ளன; இதில் ஸ்பெயின் 18 வெற்றிகளையும், பிரான்ஸ் 13 வெற்றிகளையும் பெற்றுள்ளன. சமீபத்திய யூரோ 2024 மற்றும் நேஷன்ஸ் லீக் தொடர்களின் அரையிறுதிகளில் ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அணியில் சில வீரர்களுக்குச் சிறு காயங்கள் காரணமாக ஆடுவதில் சந்தேகம் இருந்தாலும், ஸ்பெயின் அணி முழு பலத்துடன் களமிறங்கத் தயாராக உள்ளது. இந்தப் போட்டி, கால்பந்து உலகிற்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.