கோச்சடையான் திரைக்கு 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வருவது உறுதியான நிலையில், இப்போதைக்கு சில முக்கியஸ்தர்களுக்கும் இந்திய பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு படம் பிரத்தியேகக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
ஆனால் விமர்சனங்கள் எவையும் இதுவரை வெளிவரக் காணோம்.
குறைகளோ, கேலிகளோ கூட கோச்சடையானுக்கு விளம்பரங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், 'ரஜினியை சந்தித்த' மோடி மிகப் பெரும் வெற்றியுடன் இந்தியப் பிரதமராகமாறியிருப்பதும் ரஜினி தரப்புக்கு மிகப்பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் முன்பைப்போலவே மீண்டும் வட இந்திய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் ரஜினியைக் கிண்டல் செய்து 'ரஜினி ஜோக்ஸ்' வலம் வருகின்றன.
வடக்கின் தெற்கு மீதான ஏளனம் மீண்டும் ரஜினியை மையம் வைத்து ஆரம்பித்துள்ளது.
இதில் மிக முக்கியமான பரபரப்பு ஆந்திராவில் தெலுங்குப் படங்களில் ஆரம்பித்து பொலிவூட்டின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராம் கோபால் வர்மா ரஜினி பற்றி கிண்டலடித்துள்ள ட்வீட்.

தமிழிலும் மொழிமாற்றப்பட்ட படங்கள் மூலமாக அறியப்பட்ட ராம் கோபால் வர்மா அடிக்கடி ட்விட்டரில் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்பவர்.
ஆனால் சினிமா ரசிகர்களில் அதிகமானோரால் நேசிக்கப்படும் ரஜினியை மோசமாகக் கலாய்த்து இப்போது சிக்கலில் அகப்பட்டுள்ளார்.
"கோச்சடையானில் எனக்கு இருக்கும் ஒரேயொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், நான் நேசிக்கும் ரஜினியின் அழகான 'மார்புகளை' 3D தொழினுட்பம் மூலமாக ஏன் பெரிதாக்கிக் காட்டவேண்டும் என்பதே"

இது கடுமையான எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் ரஜினி ரசிகர் தரப்பிலிருந்தும், தமிழ் ரசிகரிடமிருந்தும் சந்தித்தாலும் மறுபக்கம் ஹிந்தி ரசிகர்கள் ஏகத்துக்கு ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை Retweet, share செய்து மகிழ்கிறார்கள்.
ஆனால் ராம் கோபால் தமிழ்நாட்டுப் பக்கம் செல்வதை இனித் தவிர்த்துக்கொள்வது நல்லது.