எதிர்வரும் 22ஆம் திகதி சூரியன்FMஇன் அனுசரணையில் 'World Of Ravan' இசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ள நிலையில், அதே மேடையில் இன்னுமொரு பிரம்மாண்ட நிகழ்வு இடம்பெறக் காத்திருக்கிறது.
ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிப்பில் ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி.பிரபுராம் இயக்கத்தில் டொக்டர் ஏ.ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ள 'நல்ல படம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது 'World Of Ravan' இசை மேடையில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.
இந்தியத் தமிழ்த் திரைப்படமொன்றின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'நல்ல படம்' திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ள நிலையில், எமது நாட்டின் புகழ்பெற்ற கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவிலைச் சேர்ந்த அஸ்மின் பாடல்களை எழுதியுள்ளார்.
சமூகப் பொறுப்பு, நகைச்சுவை மற்றும் காதல் போன்ற உணர்வுகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் திரைப்படமாக 'நல்ல படம்' உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை மண்ணில் “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இடம்பெறுவது இந்தியா–இலங்கை தமிழ்க் கலைஞர்களின் உறவில் புதிய அத்தியாயத்தை உருவாகும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.