அஞ்சலிக்கும் அவரது பெயரில் வரும் பிரச்சினைகளுக்கும் இப்பொழுது சில காலங்களாகத்தான் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஞ்சலி இரசிகர்களுக்காக மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கர்’, விமல் ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’ படங்களில் நடிக்கிறேன். தமிழில் எனக்கு ஏற்பட்டிருந்த இடைவெளி, நானாக ஏற்படுத்தியது. ஒரேமாதிரி வேடங்களில் நடிப்பது சோர்வாக இருந்தது.
அதனால், வித்தியாசமான வேடத்தில் நடிக்க காத்திருந்தேன். திடீரென்று என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். நல்லவேளை, இப்போது எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் மீண்டு வந்திருக்கிறேன்.
அப்பாடக்கர்’ படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அவர் எனக்கு நல்ல தோழி. படத்தில் எனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே நடக்கும் கதை வேறு. எங்களுடன் சூரி இருப்பார். மூவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் கலகலப்பாக இருக்கும். ‘மாப்ள சிங்கம்’ படத்தில் ஷைலஜா என்ற வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறேன். அதிக புத்திசாலியான, ஆளுமை உள்ள பாத்திரம். வக்கீல் என்றதும், ஏதோ தூய தமிழில் கலந்து கட்டுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். கதைக்கும், காட்சிக்கும் என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில், இந்த வயதில் நான் சந்திக்கவே கூடாத துயரமான பல சம்பவங்களைச் சந்தித்து விட்டேன். அதை நான் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவத்தை நிறையபேர் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்திக் கொடுத்தனர். எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
கதை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் தருவது போன்ற வேலைகளை நானே பார்க்கிறேன். யாரையும் நம்பக்கூடாது என்பது என் நோக்கம் அல்ல. ஆனால், இனி யாரும் எனக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுதான் என்னை இப்படி மாற்றியிருக்கிறது.
இப்போது என் அம்மாவுடன் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தங்கி யிருக்கிறேன். நடந்து முடிந்த எல்லாப் பிரச்னைகளும் அவருக்குத் தெரியும். அதனால், அவர்தான் எனக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறார். என்னை வெளியில் யார் நம்புகிறார்களோ இல்லையோ, என் அம்மா மற்றும் குடும்பத்தினர் நம்பு கிறார்கள். அது ஒன்றே போதும். எனக்கு மனநிம்மதி கிடைத்திருக்கிறது.
தமிழைத் தொடர்ந்து, தெலுங்கில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘சித்ரங்கதா’ படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக ‘தீரா ராணா விக்ரமா’ படம் இருக்கிறது. மலையாளத்தில் ‘பையன்ஸ்’ படத்துக்குப் பிறகு நல்ல வாய்ப்பு அமையவில்லை. பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால், ஏற்றுக்கொள்ளவில்லை.
சினிமாவில் நல்ல பெயரும், புகழும் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு கணவருடன் செட்டிலாக வேண்டும் என்பது அம்மாவின் கனவு. அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். என் திருமணத்தைப் பற்றி என்னென்னவோ வதந்திகள் வருகின்றன. அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை.
காரணம், உண்மையே இல்லாத ஒரு விஷயத்தை எத்தனை நாட்களுக்குத்தான் உண்மை மாதிரியே சொல்ல முடியும்? பதில் சொல்வதைவிட, எதுவும் பேசாமல் இருப்பதே மேல் என்று அமைதியாக இருந்தேன். கடைசி யில் அந்த அமைதி மட்டுமே ஜெயித்தது. என்னைப்பற்றி வெளியான அத்தனை தகவல்களும் பொய் என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது, அவள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய மிக முக்கியமான நிகழ்ச்சி. அதை தவறவிடக் கூடாது. எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது. சரியான சந்தர்ப்பம் அமையும்போது திருமணம் செய்துகொள்வேன். ஆனால், ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். முறைப்படிஅனைவரையும் அழைத்து, ரசிகர்களுக்கு அறிவித்த பிறகுதான் என் திருமணம் நடக்கும். இவ்வாறு அஞ்சலி ஊடகர்களுக்கு அறிவித்துள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-