நேபாளத்தில் அனர்த்தத்திற்கு உள்ளான பொதுமக்களுக்கு மருத்துவ நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இலங்கை வான்படையின் வானூர்தியொன்று இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளது.
4 டொன் அளவிலான மருந்துப்பொருட்கள், உலர் உணவுகள் மற்றும் குடிநீர் என்பன இந்த வானூர்தியில் எடுத்துச்செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ராணுவ அதிகாரி ஒருவரும், அவருடன் 15 உறுப்பினர்களும், கடற்படை அதிகாரியொருவரும், அவருடன் 13 உறுப்பினர்களும், வான்படையின் 11 உறுப்பினர்களும் நேபாளத்திற்கு செல்லவுள்ளனர்.
முதல்கட்டமாக 44 ராணுவ அதிகாரிகளுடன் 4 மருத்துவ நிபுணர்களும் நேற்று அங்கு சென்றிருந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட புவியதிர்வு நிலைமை தொடர்பில் செயலாற்றுவதற்காக விசேட செயலணியை ஸ்தாபிக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்பொருட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடிய விசேட காரியாலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தகவல்களை வழங்குவதற்கும், பெற்றுக்கொள்வதற்குமாக விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0112 136 136 அல்லது 0112 136 255 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்கான அவசியப்பாடுகள் உள்ளன.
இதன்போது, தொண்டு அடிப்படையில் சேவையாற்ற விரும்பும் மருத்துவர்களும், தாதியர்களும், உதவியாளர்களும் பிரதமர் காரியாலயத்தின் 071 24 92 484 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.