6,850 Views
அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட "என்னை அறிந்தால்" படத்திற்குப் பிறகு பூஜை போடப்பட்டிருக்கிறது அஜித்தின் 'தல 56' என்னும் பெயர் குறிப்பிடப்படாத திரைப்படம். 'தல'க்கு வீரம் என்னும் வெற்றிப்படத்தை இயக்கிக் கொடுத்த இயக்குனர் சிவாவின் அடுத்த படம் தான் இந்த "தல 56". இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையக் காரணமாகிறார் தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னம்.
முதல் முறையாக அஜீத்தோடு நாயகியாக ஸ்ருதிஹாசன் ஜோடி சேரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசை வழங்கவிருக்கிறார், ஸ்ருதிஹசனைப் போலவே அனிருத்தும் 'தல'யின் படத்தில் முதன் முறையாக இணைந்து பணியாற்றவிருக்கிறார் என்பதும் குறிப்பிடக் கூடிய விஷயம் தான். ஏனெனில் 'தல'யின் படத்திற்கு இசையமைக்க கேட்டபோது அனிருத் வேறு காரணங்களைக் காட்டி, அந்த வாய்ப்பைத் தட்டிக் கழித்ததாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தோடு ரோமியோ ஜுலியட் படத்தில் டி.இமானின் இசையில் இடம்பெறும் "எங்க தல......" என்ற பாடலைப் பாடி 'தல' ரசிகர்களையும் வெறுப்பேற்றியிருந்தார். இந்த நிலையிலேயே, "தல 56" இல் அனிருத்தின் இந்தப் பிரசன்னம் அமைந்துள்ளது.
இது இப்படியிருக்க, இந்தப்படத்தின் படப்பிடிப்பு பின்னிமில்லில் இன்று தொடங்குவதாக இருந்ததாம். ஆனால் அஜித் தன் அதிஷ்டநாள் வியாழக்கிழமை என்று நம்புவதால், படப்பிடிப்பு நாளை ஆரம்பிக்கவிருக்கின்றதாம்.
'தல' நடிக்கும் ஒவ்வொரு படத்தின் பூஜை, படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நாள், படம் வெளியாகும் நாள் என்று எல்லாமே வியாழக்கிழமையில்தான் இடம்பெறுமாம். அதன் காரணமாகவே, "தல 56" படத்தின் ஆரம்பப் படப்பிடிப்பையும் அஜித்தின் நம்பிக்கையை மதித்து வியாழக்கிழமைக்கு (நாளை) மாற்றியுள்ளார்களாம் படப்பிடிப்புக் குழுவினர்.
*S.G.R