17 Views
வீதிகளில் காணப்படும் வெள்ளை, மஞ்சள் நிறக் கோடுகளும், இரவு நேரங்களில் ஒளிர்வதைப் போன்ற தோற்றமளிக்கும் வீதி அடையாளங்களும் ‘ரேடியம்’ மூலம் உருவாக்கப்படுபவை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. எனினும், இவற்றின் பின்னணியில் நவீன ஒளி எதிரொளிப்புத் தொழில்நுட்பங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. வாகனங்களின் முகப்பு விளக்குகளிலிருந்து வெளிப்படும் ஒளியை மீண்டும் சாரதிகளை நோக்கித் திருப்புவதன் மூலம் இவை இரவு நேரங்களில் தெளிவாகத் தென்படுகின்றன.
வீதிகளில் கோடுகளை வரைவதற்குப் பயன்படுத்தப்படும் விசேட வர்ணப்பூச்சுகளில் நுண்ணிய கண்ணாடி மணிகள் கலக்கப்படுகின்றன. வாகனங்களின் முகப்பு விளக்குகளிலிருந்து வெளிப்படும் ஒளி இவற்றின் மீது படும்போது, அந்த ஒளி மீண்டும் சாரதிகளின் கண்களை நோக்கித் திருப்பப்படுகின்றது. இந்தச் செயன்முறை (Retroreflection) என அழைக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே, வீதிக் கோடுகள் இரவு நேரங்களில் பிரகாசமாகத் தென்படுகின்றன.
அதேபோன்று, வீதிகளின் நடுப்பகுதியிலும் ஓரங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிறிய பிரதிபலிப்பான்கள் பொதுவாக ‘ரேடியம் ஸ்டட்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. இருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை உண்மையான ரேடியத்தைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, விசேட பிரதிபலிப்புத் தாள்கள் அல்லது பிளாஸ்டிக் ப்ரிஸங்கள் மூலம் வாகனங்களின் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. சில நவீன ஸ்டட்களில் சூரிய சக்தியால் இயங்கும்(LED) விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இருளிலும் தாமாகவே ஒளிரக்கூடிய (Photoluminescent) வர்ணப்பூச்சுத் தொழில்நுட்பமும் சில நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வகைப் பொருட்கள் பகல் நேரத்தில் ஒளியை உறிஞ்சி, இருள் சூழும்போது அதனை மெதுவாக வெளியிடுகின்றன. அவற்றின் ஒளிரும் காலம் பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மையையும் கிடைக்கும் ஒளியின் அளவையும் பொறுத்து மாறுபடுகின்றது.
ரேடியம் என்பது கதிரியக்கத் தன்மையைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமமாகும். இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், நவீன வீதிக் குறியீடுகள் மற்றும் பிரதிபலிப்பான்களில் பாதுகாப்பான மாற்றுத் தொழில்நுட்பங்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வீதிகளில் ஒளிர்வதைப் போன்ற தோற்றமளிக்கும் கோடுகளும் பிரதிபலிப்பான்களும் ரேடியத்தால் உருவாக்கப்பட்டவை என்ற கருத்து தவறானதாகும்.