19 Views
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையான எஸ். மேகனா (30), அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக இறுதியாக 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விளையாடிய அவர், தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
மேகனா, 2016 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 17 இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று, முறையே 114 மற்றும் 258 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அத்துடன், 2022 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
உள்நாட்டுப் போட்டிகளில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடிய மேகனா, மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜயன்ட்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். ஓய்வு அறிவித்துள்ள அவர், தனது கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், பயிற்றுவிப்பாளர்கள், அணித் தோழிகள் மற்றும் இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இளம் வீராங்கனைகளுக்கு வழிகாட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.