8,167 Views
மனிதனின் உயிரைக்கொல்லும் பூச்சி மருந்துகளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கச் சொல்லும் விளம்பரங்களில் விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ், இதோ இப்போது விஷால் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மக்களுக்கு தீமை விளைவுக்கும் பொருட்களை விளம்பரப்படுத்தும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார் அஜித்.
அவரைப்போலவே நடிகர் ராஜ்கிரணும் விளம்பரப்பட விஷயத்தில் கொள்கையுடன் இருக்கிறார்.
இதை அவரே ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்……
”விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே… ஏன்?”
என்ற கேள்விக்கு ராஜ்கிரண் சொல்கிறார்….
”ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். ‘மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.
‘நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க.
‘வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!”
தன்னை வாழ வைக்கும் சமூகத்துக்கு துரோகம் செய்யும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் நேர்மை வழுவாத கலைஞன் ராஜ்கிரண்.
===CASTRO RAHUL ===