காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டவிரோதமானது எனவும், தன்னை கைது செய்யாமல் இருக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தாக்கல் செய்த அடிப்படை மனுவின் விசாரணையில் இருந்து ஒரு நீதியரசர் விலகியுள்ளார்.
இதன்படி அந்த மனு உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட உள்ளது.
இந்த மனுவை விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவில் ஈவா வணசுந்தர, சரத் ஆப்ரூ மற்றும் புவனேக அலுவிஹாரே ஆகிய நீதியரசர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
எனினும் தனிப்பட்ட காரணத்திற்காக தாம் இந்த குழாமில் இருந்து விலகுவதான புவனேக அலுவிஹாரே உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ, கடந்த திங்கட் கிழமை இந்த அடிப்படை மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை, பாதுகாப்பு செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 45 பேர் பிரதிவாதிகளாக அந்த மனுவில் பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.