இளையராஜாவின் அண்ணனான தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வாரிசு நடிப்பில் களம் இறங்குவதால், இந்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடம் இப்போதே தொடங்கியுள்ளது. இசைத்துறையில் பொன்விழா கண்ட இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்டியூசராக இணைந்திருப்பது திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக திரைப்படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.