இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டு 2 மணி நேரம் தாண்டியும் கூட, அவரை மீடியாக்களுக்கோ, அல்லது பொதுமக்களுக்கோ காண்பிக்கவேயில்லை. வாகா எல்லையை விட்டு அவர் வெளியே வரவில்லை.
பிநந்தன் லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாலை 5.20 மணியளவில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபிநந்தனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய பொதுமக்கள் எல்லை பகுதியில் குவிந்திருந்தனர். மேளம், தாளம் முழங்க அவர்கள் நடனமாடி அபிநந்தனை வரவேற்க காத்திருந்தனர். அபிநந்தன் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். இந்திய கொடிகளை அசைத்து வாழ்க கோஷமிட்டனர்.
ஆனால், இந்திய மக்களின் ஹீரோவான அபிநந்தனை யார் முன்னிலையிலும் அழைத்துவரவில்லை. எனவே, அவரை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் மக்கள் உள்ளனர். மீடியாக்களின் கேமராக்களிலும் அபிநந்தன் இன்னும் கிளிக் செய்யப்படவில்லை. ஆனால், அபிநந்தன் டெல்லி அழைத்துச் செல்லப்படும் முன்பாக, அவர் பொதுமக்கள் முன்னிலையில் அழைத்து வரப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் இரவு 7.30 மணிவரை வரை அபிநந்தன் வெளியே வரவில்லை. தொடர்ந்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், எனவே தாமதமாகவும் கூறப்படுகிறது. வாகா எல்லையிலிருந்து அமிர்தசரசுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயிருந்து சிறப்பு விமானத்தில், டெல்லிக்கு அபிநந்தன் அழைத்துச் செல்லப்படுவார் என தெரிகிறது.