எலியை கண்டாலே நம்மவர்கள் உடனே பொறி வைத்தோ, அல்லது ஏதும் மருந்து வைத்தோ கொலை செய்ய நினைப்பார்கள். ஏன் என்றால் எலித் தொல்லையும் ஒரு அளவில்லாத தொல்லைதான். இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனாலும் சில நாடுகளில் எலி போன்ற சிறிய பிராணிகளுக்கு மிகுந்த அனுதாபம் கொண்டு அவற்றிக்கு உயிர் போகும் நிலை உருவானால் காப்பாற்ற நினைப்பது மனித நேயமும் கூட.
மனிதன் என்றால் மனிதாபிமானம் உள்ளவனாக நடந்துகொள்வதே நல்ல பண்பாகும். எலி ஒன்றை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றிய சம்பவம் ஜெர்மனியில் நிகழ்ந்துள்ளது. அந்த சுவாரஸ்ய கதை இதுதான்.
ஜெர்மனியில், கழிவு நீர்த்தொகுதிக்குரிய மூடியில், எலி ஒன்று சிக்கிக்கொண்டு, வெளியேற முடியாமல் தவித்து வந்த நிலையில், அதனை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளார்கள். குறித்த எலி எப்படி அந்த மூடியில் சிக்கியது என்று தெரியவில்லை. இந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எலியை கண்டு பரிதாபம் அடைந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், அதனை மீட்பதற்கு கடும் முயற்சி மேற்கொண்டிருந்துள்ளார். இருந்தும் அவரால் அந்த எலியை உடனடியாக மீட்க முடியவில்லை.
குறித்த விலங்குகள் நல ஆர்வலர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது முறைப்பாட்டை அடுத்து உடனடியாக குறித்த இடத்திற்கு வந்த அவர்கள் அந்த எலியை பத்திரமாக மீட்டுள்ளார்கள். இந்த நிலையில், குறித்த தீயணைப்பு வீரர்களை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்த செய்தியை நாமும் பதிவு செய்கின்றோம்.