பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையான முறையில் எச்சரிக்கை செய்துள்ளது. மீண்டும் இந்தியாவில், தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டால் பாகிஸ்தான் பெரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் இது குறித்து தெரிவிக்கையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக மீண்டும் ஒரு பதற்றம் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் மீளவும் ஒரு தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்தால், பாகிஸ்தான் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும். இதனால், பதற்றம் அதிகரித்து இரு நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ளார். மேலும், பாலகோட்டில், இந்திய தாக்குதலுக்கு பின் தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதை அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில பயங்கரவாத குழுக்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் அலுவலகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.