பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் சிறையில் இருந்து சுகயீனம் காரணமாக, பிணையில் விடுதலையாகியுள்ளார். அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்நோக்கியுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் அடைக்கப்பட்டார்.
நவாஸ் ஷெரீப்பிற்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்ட சில நோய்கள் அதிகமானதால், சிறை வளாகத்திலேயே இதுவரை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவந்தன. இந்நிலையில், நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் திகதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பிணை அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ் சார்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நவாஸுக்கு 6 வாரங்களுக்கு மாத்திரம் பிணை வழங்கி, விடுத்தலை அறிவித்தது.
இந்தநிலையில், மருத்துவ விடுப்பில் சிறையில் இருந்து வெளியில் வந்த நவாஸ் ஷெரீப்பை, அவரது கட்சியினர் உற்சாகமாக வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.