பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார். அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் கைதாகிய அவருக்கு, 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் (Kot Lakhpat ) சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், நவாஸ் ஷெரீப்பிற்கு இருதய நோய், நீரிழிவு நோய்கள் தாக்கி இருந்தமையால் அவருக்கு சிறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவருக்கு மேலதிக மருத்துவங்கள் மேற்கொள்ள வேண்டியதன் காரணமாக, மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.
இதன்காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மார்ச் 26-ம் திகதி அன்று சுமார் 6 வாரங்களுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனையுடன் கூடிய அந்த பிணையில் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம் என்றும், ஆனால், வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிணை உத்தரவு லாகூர் சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது. இந்த நிலையில் குறித்த பிணைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக அவர் மீளவும் சிறைக்கு சென்றுள்ளார். நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர்.
இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு மற்றும் வாண வேடிக்கை என பெரும் ஆரவாரத்துடன் அவர் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.