திரையுலகில் மிக முக்கியமாக தமிழ், இந்தி, தெலுங்கு படங்களை போல் மலையாள படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
மணிசித்திரத்தாழ் என்ற மலையாள படம் சந்திரமுகி என்ற பெயரிலும், அனியத்தி ப்ராவு என்ற படம் காதலுக்கு மரியாதை என்ற பெயரிலும், பாடிகார்ட் என்ற திரைப்படம் காவலன் என்ற பெயரிலும் வெளிவந்து, சாதனை படைத்தன.
''ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற படம், தமிழில் ஜோதிகா நடித்து ‘36 வயதினிலே’ என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில் மோகன்லால் நடித்த புலிமுருகன், முதல் தடவையாக 100 கோடி ரூபாய்கள் வசூல் ஈட்டியது. அதன்பிறகு நிவின்பாலி கதாநாயகனாக நடித்த படமும் 100 கோடி வசூலைத் தொட்டது.
தற்போது மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதனால் 200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமை இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. “இந்த பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய உலக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது டுவிட்டரில் மோகன்லால் கூறியுள்ளார்.