ஆப்பு வைத்த கரீபியன்கள்,ஆதரவு கொடுத்த இலங்கையர்கள்.இந்தியாவின் இழுபறி கிரிக்கெட் தொடர் ! இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான திட்டமிட்ட தொடர் இடைநடுவே கைவிடப்பட்டு இப்போது பலவிதமான சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கின்றது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தங்களது புதிய ஒப்பந்தத்தில் வீரர்களுக்கான சம்பளத்தை 75 வீதத்தால் குறைத்தது.இதனால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் தங்களது அதிருப்தியை தங்கள் நாட்டு கிரிக்கெட் சபைக்கு எதிராக காட்ட முனைந்தே
இந்த தொடரை இடைநடுவில் கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர்.இதன்காரணத்தால் இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் ஒருவித சுமுகமற்ற நிலைமையே அண்மைய நாட்களில் காணப்பட்டது.இப்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபையிடம் மன்னிப்பு கேட்டாலும்கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தபாடில்லை.இது ஒரு தற்காலிக காய் நகர்த்தல் மட்டுமே.

மழைநின்ற பின்பும் தூவானம் ஓயாதது போல் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியான தகவல்களே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் சஞ்செய் பட்டேலின் கருத்துப்படி 400 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
அத்தோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான தொடரில் இந்திய அணி பங்கெடுப்பதும் நிறுத்தப்படும் என்ற வலுவான நிலைப்பாட்டுக்கு இந்திய கிரிக்கெட் சபை இப்போது தள்ளப்பட்டது என்பதுவே உண்மையானது.
21 ம் திகதி நடக்கும் இந்திய கிரிக்கெட் உயர் மட்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகின்றது.
இப்படியான 2 விடயங்களையும் விடுத்து ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனாக IPL போட்டிகளில் மேற்கிந்திய வீரர்களை தடை செய்வது என்ற நடவடிக்கை கடும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.

இதன்மூலமாக இந்திய கிரிக்கெட் சபையை பகைத்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தெட்டத் தெளிவாக இந்திய கிரிக்கெட் சபை காட்ட முனைகின்றது.
பணபலத்தால் பன்னாட்டு கிரிக்கெட் சபைகளையும் அடிபணிய வைத்து சர்வதேச கிரிக்கெட் சபையையும் கூட தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் பணக்கார அமைப்பான BCCI ,குறித்த நடவடிக்கைகள் மூலமாய் மேற்கிந்திய தீவுகள் வீரர்களையும் ,கிரிக்கெட் சபையையும் கதிகலங்க வைத்திருக்கின்றது.
400 கோடி நட்ட ஈடு என்பதோ 5 ஆண்டு கிரிக்கெட் தொடர் இல்லை என்பதுவோ யாரையும் மிரள வைத்திருக்காவிட்டாலும் இந்த IPL தடை மூலமாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் செய்வதறியாது திக்குமுக்காடித்தான் போயிருப்பார்கள்.
தங்கள் நாட்டு கிரிக்கெட் சபையை அடிக்கடி பகைத்துக் கொள்ளும் கிரிஸ் கெயில்,சுனில் நரைன் போன்றவர்கள் IPL போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தாம் சார்ந்த தேசிய கிரிக்கெட் அணிக்கு கொடுப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
பணம் கொழிக்கும் IPL போட்டிகளிலேயே இவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.என்னதான் IPL மூலமாக அவர்கள் சாதகங்களை அனுபவித்தாலும் ஒரு உணர்வு பூர்வமான கிரிக்கெட் ரசனையை இந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் கொடுத்து IPL க்கு உயிர் கொடுக்கும் உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை.
K.பொல்லார்ட்,L.சிம்மொன்ஸ்,DJ.பிராவோ,டிவயன் ஸ்மித்,சாமுவேல் பத்ரி,டர்ரென் சாமி,C.கெயில் ,சுனில் நரைன்,ரவி ராம்போல்,அன்ரே ரஸ்ஸல் ,ஜேசன் கோல்டர் போன்ற வீர்கள் ஒவ்வோர் IPL அணிகளுக்கும் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரங்கள் மட்டுமல்லாது அணியின் வெற்றிகளிலும் பெரும் பங்காற்றியவர்களும் கூட.
இது இப்படியிருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் அவர்கள் கிரிக்கெட் சபைக்கும் முறுகல் இருத்திருக்கின்றது.இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இரண்டரை ஆண்டுகள் சம்பளமின்றியே பல தொடர்களில் இலங்கைக்கு வெற்றியை தேடி கொடுத்தவர்கள்.
ஆசிய நாட்டின் எந்த ஒரு அணியும் கிரிக்கெட் தொடரை இவ்வாறு புறக்கணித்ததில்லை.இப்படியிருக்க இவர்களுக்கு இது ஒரு பழக்கப்பட்ட விடயம் போன்றே நடந்து முடிந்திருக்கின்றது.
*தோள் கொடுப்பான் தோழன். 
இப்படியான இக்கட்டில் தவித்த
இந்திய கிரிக்கெட் சபைக்கு ஒரு உற்ற நண்பன் போல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவியிருக்கின்றமை மிக்கப்பெரும் வரலாற்று உதவியும்+உந்துதலுமே!அப்படி இலங்கை கிரிக்கெட் அணி திடீரென்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஒப்புதல் கொடுக்காவிட்டால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதிருந்திருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் சபையை ஆளுகின்ற BIG 3 (இந்திய,இங்கிலாந்து அவுஸ்ரேலிய) அமைப்புக்கான ஆதரவை கொடுப்பதில் முறுகல் நிலையை கடைப்பிடித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதன்மூலமாய் இந்திய கிரிக்கெட் சபையின் மறைமுக எதிரியானது.
2014 IPL ஏலத்தில் இலங்கை வீரர்கள் பெருமளவில் இணைத்துக் கொள்ளபடாமல் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு மறைமுக அழுத்தத்தையும் பாடத்தையும் புகட்டியது என்ற கதையும் இருக்கின்றது.
இந்த நிலையில் 1996 உலக கிண்ண தொடரை இலங்கை கூட்டாக நடத்திய போது அவுஸ்ரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இலங்கையில் பாதுகாப்பில்லை என்பதை காரணம் காட்டி போட்டியிலிருந்து விலகிகொண்டாலும் உறவுக்கார நண்பர்களாய் இந்திய ,பாகிஸ்தான் அணிகள் கைகொடுத்து தங்களுக்கு உதவிய வரலாற்று நிகழ்வையும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்இப்போது நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கினறது.
எது எவ்வாறாயினும் கைவிடப்பட்ட குறித்த மேற்கிந்திய தீவுகள் ,இந்திய அணிகளுக்கிடையிலான தொடரை காட்டிலும் உணர்ச்சி பூர்வமாக ,விறுவிறுப்பாகவும் எதிர்வரும் நவம்பரில் ஆரம்பமாகும் இந்திய +இலங்கை கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
காத்திருப்போம் காத்திரமான களமுனை பெறுபேறுகள் நோக்கி !!!
*தில்லையம்பலம் தரணீதரன்