முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழித் திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது.
'Love You' எனப்படும் இத் திரைப்படம் வெறும் 10 இலட்சம் இந்திய ரூபாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
95 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படத்தில், AI இசையமைத்த 12 பாடல்களும் உள்ளன. கதாநாயகன், கதாநாயகி உள்ளடங்கலாக அனைத்து கதாபாத்திரங்களையும் AI உருவாக்கியுள்ளது.
இந்தியத் திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல, ஆனால் முழுக்க முழுக்க AI மூலம் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு, இந்திய அரசின் தணிக்கைக் குழுவினால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியானது இதுவே முதல்முறை.
பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வல்லுநர் நூதன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை. அதற்குப் பதிலாக, சுமார் 30 செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
ஆறு மாதங்களில் 10 இலட்சம் இந்திய ரூபாய் என்ற பட்ஜெட்டில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.