முன்னாள் உலக செஸ் சம்பியன்களான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது.
இதில் இருவரும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் முறையில் தலா 6 முறை மோதினர்.
ஒவ்வொரு நாளும் ரேபிட், பிளிட்ஸ் வடிவில் தலா இரு ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் முதல் 2 நாள் ஆட்டங்கள் முடிவில் காஸ்பரோவ் 8½-3½ என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தார்.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த ரேபிட் பிரிவின் முதலாவது ஆட்டத்தின் 61-வது நகர்த்தல் சமநிலையில்
முடிந்தது.
இதன் 2-வது ஆட்டத்தில் காஸ்பரோவ் 40-வது நகர்த்தலில் ஆனந்தை தோற்கடித்தார்.
இதன் மூலம் 2 ஆட்டம் எஞ்சி இருந்த நிலையில் காஸ்பரோவ் சம்பியன் பட்டத்தை உறுதிசெய்தார்.
இதையடுத்து, நடந்த பிளிட்ஸ் பிரிவில் முதலாவது ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் 27-வது நகர்த்தலில் காஸ்பரோவுக்கு பதிலடி கொடுத்தார்.
இதன் 2-வது ஆட்டத்திலும் ஆனந்த் வெற்றியை வசப்படுத்தினார்.
முடிவில் காஸ்பரோவ் 13-11 என்ற புள்ளிக் கணக்கில் ஆனந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.