பரிதி ஒளி கண்டு பார் மாந்தர் மகிழ்தல் போல, பண்பலை முதல்வன் அழைத்திட்டால் எம் சொந்தம் எழுச்சி கொள்ளும்..
ஆம்!!
குளிர்ந்த மாதம் தன்னில் எம் குழந்தைகளின் குரல் கேட்டால் கரையாத கல்லும் கனிந்து விடும் இது நிதர்சனம்.. உறவிழந்து தவிக்கும் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சம் தன்னில் நிறைந்திட்ட எதிர்பார்ப்புகள் பல நூறு..அத்துனையும் மொத்தமாய் செய்திட எம் சித்தங்கள் ஏங்கி நிற்கும்..ஏன் எனில் அவர்கள் எம் உறவுகள்.. எம் உடன் பிறப்புகள்.....
பண்பலை முதல்வன் சூரியன் பதினேழு ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லா முதல்வனாய் வலம் வருதல் போல், அவன் முன்னெடுக்கும் திட்டங்கள் யாவும் தன்னிகரில்லாதவை..அந்த வகையில் எம் நிறுவன தலைவர் திரு ரேய்னோ சில்வா அவர்களின் சிந்தையில் உதித்த சமூக நலன் சார் திட்டங்களில் முதன்மையானது உதவும் கரங்கள் செயற்திட்டம்..
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தமிழ் மக்களின் பிரதேசங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் சுபீட்சமான வாழ்விற்காய் சூரியன் இவ் உதவும் கரங்கள் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றான் .
அந்த வகையில் இவ்வருடம் வன்னி - கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள சிறுவர், சிறுமியர், மாணவியர்க்காக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக சூரியன் வானொலியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, நேயர்களினால் வழங்கப்பட்ட ஏராளமான பொருட்கள், கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து, கல்வி கற்க சிரமங்களை எதிர்கொள்ளும் சிறுவர், சிறுமியர் மற்றும் சிறுவர் இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்று வழங்கப்பட்டன ..

கடந்த வருடம் கொஸ்லாந்தை - மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் நாளாந்த வாழ்க்கைக்கான பொருட்களை உதவும் கரங்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தகது
சூரியன் முன்னெடுத்த இவ் அறப்பணிக்கு உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச வாழ் எம் புலம்பெயர் தமிழ் சொந்தங்களும் இணைந்து தம் பங்களிப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது ...
தினை துணை நன்மை புரினும் பனை துணையாய் கொள்வோர் பயன் தெரிந்தோர் ..ஆனால் அன்பெனும் கோட்டில் ஒருமித்து அந்த பனை துணை போல் நீங்கள் யாவரும் செய்திட்ட உதவி தனை நன்றி எனும் வார்த்தைக்குள் அடக்காது நானிலம் எங்கும் உள்ள நற் செயல்கள் எல்லாவற்றோடும் சீர்தூக்கி , உங்கள் அன்பினை சிரமேற்கொண்டு கெளரவிக்கின்றோம்
வாழ்த்துக்களோடு
சூரியன் fm