2,287 Views
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், ஆப்கானிஸ்தானிலும் காலூன்றி உள்ளது.
தலிபான் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தலிபான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் நான்கார்ஹார் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் ஆயுததாரிகள் 4 பேரை தலையை வெட்டி கொலை செய்துஉள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தான் ஆயுததாரிகளும், ஐ.எஸ். தீவிரவாதிகள் 4 பேரின் தலையை வெட்டி, சாலையின் ஓரத்தில் பொதுமக்களின் காட்சிக்காக வைத்து உள்ளனர். மொத்தம் 8 தீவிரவாதிகள் அங்கு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
நான்கார்ஹார் மாகாணத்தின் அச்சின் மாவட்டத்தில் பிரதான சாலையில் தீவிரவாதிகளின் தலைகள் கற்கள் மீது வைக்கப்பட்டு உள்ளது.
அச்சின் மாவட்ட ஆளுநர் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கையில்," இரண்டு தீவிரவாத குழுக்கள் மோதிக்கொண்டதில் மொத்தம் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகரும், உள்ளூர் எம்.பி.யுமான ஷிகிர் காதிர் கட்டுப்பாட்டில் உள்ள இயக்கத்தின் 4 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டு, தலைவெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர்" என்று தெரிவித்து உள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் ஆயுததாரிகள், பழிவாங்கும் விதமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் 4 பேரை தலை துண்டித்து கொலை செய்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆயுததாரிகள் அச்சின் மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், ஐ.எஸ். தீவிரவாத குழுக்கும் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆயுததாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.