81 Views
சுமார் 10 தொன் எடையைக் கொண்ட இந்த விமானத்தில் 19 பயணிகள் வரை பயணிக்க முடியும். மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானம், ஒருமுறை மின்னாற்றலைப் பயன்படுத்தி சுமார் 400 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்குப் பதிலாக, இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சாரத்தால் இயங்கும் விசிறி அமைப்புகள் இதனை இயக்குகின்றன. இந்தத் திட்டம் சீனாவின் COMAC நிறுவனம், CATL மின்கலத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆளில்லாத நிலையில் பல சோதனைப் பறப்புகளை மேற்கொண்ட இந்த விமானம், தற்போது அடுத்தகட்டப் பரிசோதனைகளை நோக்கி நகர்ந்துள்ளது. இதற்கான வகைச் சான்றிதழ் விண்ணப்பத்தையும் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், வழக்கமான பயணிகள் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னர் மேலதிகச் சோதனைகளையும் ஒழுங்குமுறை அனுமதிகளையும் பெற வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் குறுகிய தூர நகரங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் மின்சார விமானங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பை இந்தப் புதிய முயற்சி ஏற்படுத்தியுள்ளது.