கத்தியை தொடர்ந்து 'லிங்கா'வும் வழக்கு விசாரணையில்..???கோடம்பாக்கத்திலிருந்து வெளியாகும் படங்கள் எல்லாம் சொல்லப்பட்ட திகதியில் வெளியாகி திரைக்கு வருகின்றதோ இல்லையோ நீதிமன்றம் செல்லத் தவறுவதில்லை. இந்த வரிசையில் இறுதியாக இணைந்தது
சூப்பர்ஸ்டார் ரஜினியின் லிங்கா.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இந்தப் படத்தில் ரஜினி, அனுஷ்கா,சோனாக்க்ஷி ஷின்ஹா மற்றும் பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை வழங்குகிறார். ரொக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கின்றார். இந்தநிலையில் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் திகதி வெளியாகவிருந்தது லிங்கா.
இவ்வாறான நிலையில் முல்லைவனம்999 என்ற தனது கதையையே இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திருடி "லிங்கா" என்ற பெயரில் இயக்கியிருப்பதாகவும் அதனால் "லிங்கா" வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில், மதுரையைச் சேர்ந்த சின்னத்திரைத்தொடர் இயக்குனர் கே.ஆர். ரவி ரத்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பதையும், அந்த வழக்கு இடம்பெறுகின்ற தகவல்களையும் உங்களுக்கு நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிபதி வேணுகோபால். படக்குழுவில் முக்கியமானவர்களான ரஜினி, ரவிக்குமார், வெங்கடேஷ் மற்றும் லிங்கா கதாசிரியரான போன்குமாரன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு அவர்கள் நால்வரும் தமது விளக்க மனுவை தனித்தனியாக நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனராம்.
இவ்வாறு அவர்கள் அனுப்பிய விளக்கங்களை ஆராய்ந்ததோடு, வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி இந்த வழக்கிற்கான தீர்ப்பை முடிவு செய்ததோடு இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது .
இப்படியான இழுபறி நிலையில் இருந்த 'லிங்கா' வழக்கு காரணமாக, லிங்கா டிசம்பரில் வெளியாகுவது சந்தேகம் என்ற நிலையில் கவலையில் ஆழ்ந்திருந்தனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இவ்வாறு கலையில் இருந்த ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் லிங்கா படக்குழுவினருக்கும் சந்தோசம் தரும் முடிவை சொல்லியிருக்கிறதாம் மதுரை உயர்நீதிமன்றக்கிளை.
திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. லிங்காவை தடை செய்ய வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளாராம். தேவை ஏற்படுமிடத்து மனுதாரர் நட்டஈட்டு நிவாரணம் கோரி சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி வேணுகோபால் தனது தீர்ப்பில் கூறியுள்ளாராம்.
இந்தத் தீர்ப்பினால் மீண்டும் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் திகதி லிங்கா வெளியாகும் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனராம்.
'ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாரி' என்ற சூப்பர் ஸ்டாரின் சூப்பரான பஞ்ச் பேசி கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
*கணேஷமூர்த்தி ராகவன்