நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, இங்கிலாந்தை முதலில் துடுப்பாட அழைத்தது. ஆரம்ப வீரராகக் களம் கண்ட அறிமுக வீரர் அனெரின் டொனால்ட் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அதிரடி ஆரம்பம் அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து இணைந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி புரூக் மற்றும் ஜோஸ் பட்லர் கூட்டணி இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
இவர்கள் இருவரும் இணைந்து 60 பந்துகளில் 128 ஓட்டங்கள் குவித்தனர்.
புரூக் வெறும் 42 பந்துகளில் தனது 2வது T20 சதத்தைப் பதிவு செய்து, ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள் விளாசினார். அவருக்குப் பக்கபலமாக ஆடிய பட்லர் 44 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 254/4 என்ற பிரம்மாண்ட ஓட்டக் குவிப்பை நிகழ்த்தியது.
255 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிய இலங்கை அணி, ஆரம்ப முதலே இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அறிமுக வீரர் சோனி பேக்கர் 90mph-க்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசி, 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கையின் துடுப்பாட்ட வரிசையைச் சரித்தார்.
இலங்கை சார்பாக 8வது இடத்தில் களமிறங்கிய துனித் வெல்லாலகே எடுத்த 33 ஓட்டங்களே அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக அமைந்தது. மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்தின் அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.