கால்பந்து இரசிகர்களின் கொண்டாட்ட நாயகனாக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அரங்குகளில் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.
சவூதி அரேபியாவில் இடம்பெற்று வரும் 'சவூதி புரோ லீக்' தொடரில், அல்-நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் அல்-ரியாத் அணிக்கெதிரான போட்டியில் ரொனால்டோ அடித்த கோலின் மூலம் தொடர்ந்து 25 சீசன்களாக கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதுவரை 24 சீசன்களில் தொடர்ச்சியாக கோல் அடித்திருந்த சுவீடனின் முன்னாள் வீரர் ஸ்லட்டான் இப்ராஹிமோவிச்சின் சாதனையை இந்த கோலின் மூலம் ரொனால்டோ முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 'சவூதி புரோ லீக்' வரலாற்றில், ரொனால்டோ இதுவரை 103 கோல்களை அடித்ததன் மூலம் முகமது சஹ்லாவியின் முதல் இடத்தை சமன் செய்துள்ளார்.
ரொனால்டோவின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 'சவூதி புரோ லீக்' தொடரின் புள்ளிப்பட்டியலில் அல்-நாசர் அணியானது 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.