அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விடைபெற்றுள்ளார். பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே ஆர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய கடைசிப் போட்டியாக அமைந்தது. இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற சர்வதேசப் பயணம் ஒரு உணர்ச்சிகரமான நிறைவை எட்டியுள்ளது.
பியூனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் மைதானத்தில் 85,000க்கும் மேற்பட்ட இரசிகர்கள் திரண்டு மெஸ்ஸிக்குப் பிரமாண்டமான பிரியாவிடையை அளித்தனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும், இரசிகர்களை நோக்கி அவர் விடைபெற்றபோதும் உணர்ச்சிவசப்பட்டு மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார். இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3–0 என்ற கணக்கில் பெனின் குடியரசை தோற்கடித்தது. இந்த இறுதிப் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்ததுடன், இரண்டு கோல்களுக்கு உதவியும் புரிந்து தனது முத்திரையைப் பதித்தார்.
போட்டியின் 10வது நிமிடத்தில் ஆட்டம் சில நொடிகள் நிறுத்தப்பட்டது. ஆர்ஜென்டினா அணியின் புகழ்பெற்ற 10ம் இலக்க ஜெர்சியைக் குறிக்கும் வகையில், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களும் எழுந்து நின்று மெஸ்ஸிக்கு நீண்ட நேரம் கைதட்டி தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர். மைதானத்திற்குள் அவரது 10-ம் எண் கொண்ட பிரமாண்டமான அர்ஜென்டினா ஜெர்சி வைக்கப்பட்டு, அதில் Gracias(நன்றி) என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டிருந்தது.
அர்ஜென்டினா அணிக்காக 2005ம் ஆண்டு அறிமுகமான மெஸ்ஸி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அந்த அணியின் அச்சாணியாகத் திகழ்ந்தார். அர்ஜென்டினாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடியதுடன், 126 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். 2021 கோபா அமெரிக்கா பட்டம், 2022 கத்தார் உலகக் கோப்பை வெற்றி மற்றும் 2024 கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டம் என அணியை உன்னத நிலைக்கு அழைத்துச் சென்ற பெருமை இவரையே சாரும்.
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவது குறித்துப் பேசிய மெஸ்ஸி, "நான் எனது நாட்டிற்கு அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இனி கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை" என்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் தனது பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெற்றாலும், அவர் தொடர்ந்து 'இன்டர் மியாமி' அணிக்காகத் தொடர்ந்து விளையாட உள்ளார். இருப்பினும், அர்ஜென்டினா நீல-வெள்ளை ஜெர்சியில் 10-ம் எண் உடலுடன் மெஸ்ஸி இனி களமிறங்க மாட்டார் என்பது உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்களுக்கு ஒரு நீங்காத ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.