வசூலில் சாதனை படைக்குமா சங்கரின் 'ஐ'திரைப்படம்?மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு முதல் நாளான கடந்த 14-ம் திகதி வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் ஐ. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடித்து வெளியாகியுள்ளது இந்தப்படம். படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விக்ரமின் நடிப்பிலும், எமியின் அழகிலும் உண்மையிலேயே மெரசலாகியிருப்பார்கள் என்றால் மிகையில்லை.
இந்தநிலையில், படம் பற்றிய எதிர்மறை விமர்சனங்களும் எழாமல் இல்லை. இருந்தாலும் அவை எல்லாம் 'ஐ' படத்தின் வசூலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையாம். கடந்த 14-ம் திகதியிலிருந்து இன்றுவரை திரையரங்கம் நிறைந்த காட்சிகளாகவே (Housefull) ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்.
'ஐ' படம் வெளியாகி நான்கு நாட்களில் மட்டும், இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்மழை பொழிந்திருக்கிறதாம். இதுவரைக்கும் தமிழ்சினிமாவில் வசூல் மன்னனாகத் திகழ்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன், லிங்கா ஆகிய படங்களும், இளையதளபதி விஜய்யின் கத்தி படமும் கூட ,ஐ, படத்தை போல இவ்வளவு விரைவாக வசூலை அள்ளிக்கொடுக்கவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சொல்கிறார்களாம்.
இந்தப்படம் வெளியானதிலிருந்து ஒரு சில பிரச்சனைகள் இயக்குனர் சங்கரை சங்கடத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தப்படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக திருநங்கை ஒருவரும் நடித்திருந்தார். அவர் சம்பந்தமான காட்சிகள் திருநங்கைகளை இழிவுபடுத்துவது போன்று இடம்பெற்றிருப்பதாகக்கூறி சங்கருக்கு எதிராக திருநங்கைகள் ஒன்று கூடி சங்கரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் இன்றையதினம் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக சங்கரின் வீட்டிற்கு பெரும் காவல்துறைப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கோடம்பாக்கத் தகவல் சொல்கின்றன.
எது எப்படியோ, சிக்கலில் சிக்கிக் கொண்டாலும் தமிழ்சினிமாவின் வசூலில் சிறந்த இயக்குனர் என்ற பெயரை சங்கர் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் என கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. சங்கரின் நிலை இப்படியிருக்க, தயாரிப்புக்கான செலவுகளை வசூல் செய்திருக்கும் இந்த "ஐ" படம், நேற்றையதினத்திலிருந்து வசூலில் வாரிக்குவிக்க ஆரம்பித்திருக்கும் தொகை படத்தின் லாபத்தின் தொகையில் சேரவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
*கணேஷமூர்த்தி ராகவன்