அடுத்த சூப்பர் ஸ்டார் ...அஜித்???எண்ணற்ற ரசிகர்களின் எதிர்பார்ப்போடு, எதிர்வரும் 29-ம் திகதி வெளியாகவிருக்கின்றது தல அஜித்தின் என்னை அறிந்தால். உலகெங்கும் ஒரேநாளில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகி சாதனை படைக்கவிருக்கின்றது இந்தப்படம்.
ஹரிஷ் ஜெயராஜ் இசை வழங்க, இயக்குனர் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன.
இந்தநிலையில், பாடல்கள் போலவே என்னை அறிந்தால் படமும் சூப்பர்ஹிட் ஆகவேண்டும் என்பதற்காக, சமய நம்பிக்கையின் அடிப்படையில் அமாவாசை தினமான நேற்று இந்தப்படத்தை திரைப்படத் தணிக்கை குழு(சென்சார்போர்ட்) இன் பார்வைக்காக அனுப்பி வைத்துள்ளார்களாம் படக்குழுவினர். இவ்வாறு நேற்று அனுப்பி வைக்கப்பட்ட படத்தை தணிக்கைக் குழுவினர் நாளை பார்ப்பதோடு 'U' சான்றிதழ் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் "என்னை அறிந்தால்" படக்குழுவினர்.
இது இப்படியிருக்க, என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததையும் விட பெருமெடுப்பில் சூடுபிடித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தும், விநியோகஸ்தர்கள் பக்கங்களிலிருந்தும் நம்பத்தகுந்த வகையில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் தான் உலகெங்கும் ஏராளமான திரையரங்குகளில் என்னை அறிந்தால் திரைப்படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விஷயம் வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போது, வெளிநாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை திரையிட படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றார்கள். ஏனெனில், வெளியாகும் படங்களின் வசூல் சாதனையில் வெளிநாடுகளின் வசூல் தொகையும் பிரதான பங்கு வகிப்பதுதான் இதற்கான காரணம். அந்தவழியில் என்னை அறிந்தால் படமும் களமிறங்கியிருக்கின்றது என்கிறார்கள் விடயமறிந்த தரப்பினர்.
அந்தவகையில், இம்முறை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே 30 திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றது 'தல'யின் "என்னை அறிந்தால்". இதுவரை பிரான்ஸ் நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் "லிங்கா" படம் மட்டுமே 53 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்திருந்ததாம். அதற்கு அடுத்தபடியாக தற்போது, 'தல'அஜித்தின் "என்னை அறிந்தால்" திரைப்படம் தான் 30 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரமின் "ஐ" படம் 23 திரையரங்குகளிலும் விஜய்யின் "கத்தி" 24 தியேட்டர்களிலும், "ஜில்லா" 23 திரையரங்குகளிலும், 'தல'அஜீத்தின் "வீரம்" 10 திரையரங்குகளிலும் வெளியாகியிருந்தது. அந்தவகையில் இளையதளபதி விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, "என்னை அறிந்தால்" திரைப்படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார் 'தல'அஜித்.
இந்த விஷயத்தை அறிந்த அஜித் ரசிகர்களோ, அடுத்த சூப்பர்ஸ்டார் ஆகுவதற்கு எங்க 'தல' தான் பொருத்தமானவர் என மறுபடியும் இளையதளபதி ரசிகர்களை வம்புக்கு இழுக்க ஆரம்பித்திருப்பதாகவும் ஒரு கொசுறுத்தகவல் எங்கள் காதோரம் கிடைத்திருக்கிறது.
'தல'யா..? தளபதியா....? - வெளியாகட்டும் "என்னை அறிந்தால்"
*கணேசமூர்த்தி ராகவன்.