தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான, சொத்து குவிப்பு மேன்முறையீட்டு வழக்கு தொடர்பில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று முற்பகல் 11 மணிக்கு தீர்ப்பளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரும், தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
ஜெயலலிதாவின் அரசியல் செயற்பாடுகளை நிர்ணயிக்கக் கூடிய தீர்ப்பு என்பதால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்த வழக்கு குறித்து தீவிரம் காட்டிவருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர்.
வழக்கை விசாரித்த, பெங்கர்ரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட நால்வருக்கும், கடந்த வருடம் செப்டம்பர் 27 ஆம் திகதி தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
அபராதமாக ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் விதித்தார்.