அண்மையில் நடிகை ஓவியா நடித்து வெளிவந்த 90 ml திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனிட்டா உதீப் இயக்கத்தில், நடிகை ஓவியா இந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஓவியா நடித்த, இந்த படம் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, தேசிய லீக் கட்சி மகளீர் அணி தலைவர் அரிபா ரசாக் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் 90 ml திரைப்படத்திற்கு எதிராக அவர், சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த படத்தின் இயக்குனர் மீதும் அரிபா ரசாக், வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரிபா ரசாக் கருத்து வெளியிட்ட போது, பெண்களை இழிவுபடுத்தும் திரைப்படத்தில் நடித்த ஓவியாவை, உடன் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், 90 ml திரைப்படத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து நடிகை ஓவியா கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், பல ரசிகர்கள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.