கிரிக்கெட் பிரியர்களின் கலக்கலான காலம் இது என்றே கூறலாம். ஏன் என்றால் IPL கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
Chennai super kings - Bangalore royal challengers அணிகள் இந்த வருட IPL முதல் போட்டியில் மோதும் சிறப்பை பெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்பனை செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ருபாய் பெறுமதிக்கு 1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.
IPL போட்டிகள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரையும் ஆர்வப்படுத்தி இருக்கும் இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிகளை பார்க்கமுடியாத வகையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சௌத்ரி ஃபாவத் ஹுசைன் தெரிவிக்கையில், நாங்கள் அரசியலையும் கிரிக்கெட்டையும் தனித்தனியாக வைத்திருக்கிறோம், ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ராணுவ தொப்பிகளை அணிந்து விளையாடியது, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஐ.பி.எல் போட்டி பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படவில்லை என்றால் அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டிற்கான மிகப்பெரிய இழப்பாகும். சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் T- 20 போட்டிகளுக்கான அனுசரணை மற்றும் நிதியுதவி அனைத்தையும் நிறுத்துவதாக IMG Reliance நிறுவனம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.