Spy camera விவகாரம் தென்கொரியா மக்களை மாத்திரமன்றி, அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தென்கொரியாவில் ரகசிய, சிறிய ரக கமெராவை கொண்டு தனியார் விடுதிகள், உடைமாற்றும் அறைகளில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து அவற்றை இணையதளங்களில் பதிவேற்றும் நடவடிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன.
இப்படியான பிரச்சினைகள் காரணமாக, தென் கொரியா அரசாங்கம் பெண் அதிகாரிகளை நியமித்து பொது இடங்கள், உணவகங்கள், விடுதிகளில் போன்றவற்றில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது . எவ்வாறான நடவடிக்கை எடுத்தாலும் இந்தக் குற்றச் செயல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.
வருடா வருடம் இந்த குற்றம் தொடர்பில் பல வழக்குகள் பதிவாகி வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டில் மாத்திரம் 6,470 வழக்குகள் ரகசிய கமெரா பொருத்தியமை தொடர்பில் பதிவாகியுள்ளன. அத்துடன் கடந்தாண்டு ஏராளமான பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனபோதிலும், இந்தக் குற்றங்கள் குறையாமல் இருப்பதற்கு காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இப்படி தீராப்பிரச்சினையாக இந்த ஸ்பை- கமெரா விவகாரம் சென்றுகொண்டிருக்க, மீண்டும் தென்கொரியாவில் ஒரு அதிர்ச்சியான தகவல் ஆதாரங்களோடு சிக்கியுள்ளது. தென்கொரியாவில் உள்ள விடுதிகளில் தங்கிய 1,600 பேர் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஒரு இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த இணையத்தளமோ, தனது வாடிக்கையாளர்களிடம் கட்டணங்களைப் வசூலித்துக்கொண்டு இந்த வீடியோக்களை வழங்கியுள்ளது.
மேலும், அந்த இணையத்தளம் live streaming (நேரடி ஒளிபரப்பு) செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விடயங்கள் வெளியாகிய நிலையில் அந்நாட்டின் தேசிய புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது, காவல்துறையினரால் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், Hair dryer, switches என அறைகளில் உள்ள பல்வேறு மின்சாதனப் பொருள்களில் ரகசிய கமெராக்களை பொருத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். சிறிய அளவிலான விடுதிகளில்தான் இந்த வீடியோக்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுள்ளன.
10 நகரங்களில் உள்ள 30 விடுதிகளில், 42 அறைகளில் ரகசிய கமெராக்களை வைத்துள்ளனர். இந்தக் கும்பல் இதுவரை 800-க்கும் அதிகமான வீடியோக்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர்கள் அனைவரையும் பீதி அடைய வைத்துள்ளது. எது எப்படியோ விடுதிகள் மற்றும் உடை மாற்றும் அறைகளில் எப்போது மிகுந்த அவதானமாக இருப்பது நல்லது .