டுபாயில் இடம்பெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் (global exhibition) கண்காட்சியில் தாஜ்மஹால் மாதிரி வடிவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் டுபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது கண்காட்சி டுபாயில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமானது.
இக்கண்காட்சியானது வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறும். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஆசிய ,ஐரோப்பிய, அரபு நாடுகள் என 78 நாடுகளின் கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே இடத்தில் எல்லா நாடுகளின் உணவு பழக்க வழக்கங்கள், புகழ்பெற்ற ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணிலடங்கா பொருட்கள் பற்றி அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உயரமான டுபாய் புர்ஜ் கலீபா (Dubai burj khalifa ) மாதிரி கட்டிடம் மற்றும் பல்வேறு மாதிரி வடிவமைப்புகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான நுற்றுக்கணக்கான விளையாட்டு சாதனங்கள், வீடியோ கேம்ஸ்கள் என்பன நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்கின்றனர். பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகிறது. 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை தண்ணீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் படகில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளும் விற்கப்படுகிறது.